Welcome to UK INFOS
(Abacus, Hindi & Vedic Maths Coaching Centre)
Batch 14 Results - May 2023
பாரதி
சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட, தமிழ்க் கவிதையுலகின் சூரியன் பாரதி. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு பின் கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது "முதுமையில் மண்" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.
அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியைக் குறிக்கும் பட்டத்தைத் தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல, பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதிதான்
தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாகச் சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்தப் பெண்ணைச் சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.
மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக் கவிதை தான், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே'. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதைப் பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி, `கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது!' என்று மட்டும் சொன்னார்.
எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்குத் தானியங்களைக் கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர், புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.
`என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று பாரதி எழுதினார்.
`கடமை அறியோம் தொழில் அறியோம்!' என்று பறவையின் மனப்பான்மையிலும், `தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' என்றும் பாரதியால் தான் பாட முடியும்.
வறுமையில் வாடிப்போன அவர் "பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது... வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன் நான் ?" என்று புலம்பினார்
பாரதி காந்திக்குக் கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால், கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது, 'பிறரை புண்படுத்தும்பொழுது அன்னை மொழியைப் பயன்படுத்திப் பழக்கமில்லை.' என்று தெறித்து வந்தது பதில்.
சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துகொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத பாரதி நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.
👇👇👇👇👇
Click Here to see the Result:
☝️☝️☝️☝️☝️
Thank you for Visiting.
Keep Learning.......
0 Comments